முல்லைத் தீவிலுள்ள புலிகளின் அடையாளங் காணப்பட்ட மூன்று இலக்குகள் மீது விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்கள் மற்றும் எம் – ஐ 24 தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களும் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு நகருக்கு தென் பகுதி விசுவமடுவுக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் மற்றும் மண் அரண்கள் மீதே விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது, 59வது படைப் பிரிவினர்கள் மற்றும் இரண்டாவது செயலணியினர் ஆகியவற்றுக்கு உதவியாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜனக நாணயக்கார மேலும் தெரிவித்தார்.