பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு புதிய அமைச்சுகள், ஜனாதிபதியினால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில மாற்றங்கள் ஏற்படும் என அரசாங்கத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு புதிய அமைச்சுகள், ஜனாதிபதியினால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இலங்கையில் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், மேலும் சில அமைச்சுகளின் விடயதானங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி செயற்படவுள்ளது.
இதுவரையில், ஜனாதிபதி செயலகத்தின் கீழிருந்த இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், சிறிலங்கா ரெலிகொம் மற்றும் அதன் நிர்வாக நிறுவனங்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இதுவரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கீழிருந்த பொலிஸ் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பன புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.