“அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை “ என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயத்தை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த ஊடகத்திற்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மாகாண சபைகளின் ஊடான அதிகாரப் பகிர்வை முழுமையாக அமுல்ப்படுத்துவதனை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை நோக்கி நகர முடியும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நான் சொல்வது, சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்வதுடன் உருவாகியிருக்கும் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதெல்லாம் கடந்த நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும் அவர்களுக்கு முட்டுக் கொண்டுத்துக் கொண்டிருந்தவர்களும் செய்திருக்க வேண்டிய வேலை. மாகாண சபைகள் செயலிழந்து போக தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம்.
அதிகாரங்கள் தேவை என்று கூப்பாடு போடுகின்றவர்கள், கடந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டுடிருந்தபோது நினைத்திருந்தால், பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் ஒன்றை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றி விட்டு பழைய விகிதாரசார தேர்தல் முறையூடாக நடத்தியிருக்க முடியும். ஆனால் அக்கறையின்மையினால் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
எனினும், இந்த அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை எனவும் தெரிவித்தார் அமைச்சர்.