“ஈரானுடனான அமெரிக்காவின் உறவைச் சரிசெய்வது ஜோ பைடனுக்கு எளிதானது” – ஈரான் ஜனாதிபதி

“ஈரானுடனான அமெரிக்காவின் உறவைச் சரிசெய்வது ஜோ பைடனுக்கு எளிதானது” என்று ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்க உறவு எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவுகானி மேலும் கூறும்போது,

”ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பிரச்சினையைத் தீர்ப்பது ஜோ பைடனுக்கு எளிதானது. ஆனால், இப்பிரச்சினையைத் தீர்க்க நேரம் எடுக்கும்” என்றும் ஹஸன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துள்ளார். ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்பு, அந்நாட்டின் மீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் விதித்து வந்தார்.

முன்னதாக, சமீபத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் தங்கள் நிலைப்பாடு ஒரே மாதிரியாகவே இருக்கும் என ஈரான் தெரிவித்தது. தற்போது, ஈரானுடனான அமெரிக்காவின் உறவைச் சரிசெய்வது ஜோ பைடனுக்கு எளிதானது என்று ஹஸன் ரவுகானி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *