வன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்களை அரசு புதிதாக அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தினுள் அனுப்பி வைப்பதற்குரிய ஒத்துழைப்பை பெற்று கொள்வது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா பிரதிநிதியுடன் வன்னிப்பிராந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய பேச்சுகள் நடத்தியுள்ளார். கடந்த புதன் கிழமை வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா அலுவலகத் தலைமையதிகாரி வலரி பெட்டிட்டியருக்கும் வன்னி இராணுவத் தளபதிக்கும் இடையிலான இந்தச் சந்திந்திப்பின்போது, அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடத்துவதை நிறுத்துவது, விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது முல்லைதீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் விபரங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றைத் தருமாறு வன்னிப்பிராந்திய இராணுவத் தளபதி சர்வதேச செஞ்சிலுவைக்குழு அதிகாரியிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, வன்னிப் பிரதேசத்திற்கான உணவு மற்றும் அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து உலக உணவுத்திட்ட அதிகாரியுடனும், வன்னிப் பகுதியில் உள்ள மக்களின் மனிதாபிமான தேவைகள் குறித்து வவுனியாவில் உள்ள ஐ.நா. வின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியுடன் பேச்சுகள் நடத்தியதுடன் போர்ப்பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாப்பாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்து வருவது குறித்தும், வன்னிப்பிராந்திய இராணுவத்தளபதி பேச்சுகள் நடத்தியுள்ளார்.