இந்திய, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாக இலங்கைக்கு சொந்தமான கடல் எல்லையில் மாற்றங்கள் ஏற்படும். எனினும், சார்க் மாநாட்டில் வடக்கு கடல் எல்லை தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லையென அரச தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே கடற்றொழில் நீரக வளங்கள் அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது.
இலங்கையின் வடக்கு கடல் வலயத்தில் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் எமது நாட்டிற்கு சொந்தமானதாகும். இதில் பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 16 கடல் மைலும் காங்கேசன்துறையிலிருந்து கிழக்காக 15 கடல் மைலும் திருகோணமலையிலிருந்து கிழக்காக 122 கடல் மைலும் முல்லைத்தீவிலிருந்து கிழக்காக 28 கடல் மைலும் உள்ளடங்குகின்றது.
இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இந்திய மீனவர்களின் 66 படகுகள் தொடர்பிலான வழக்கு யாழ். நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எல்லை தாண்டியதாலேயே இவை கைப்பற்றப்பட்டன. இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே, இலங்கையின் கடல் எல்லையின் தூரம் நீங்கள் கூறியதை விடவும் அதிகமாக இருந்ததென்பதை ஏற்றுக்கொள்வீர்களா என்று அமைச்சரிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாக கடல் எல்லைகளில் மாற்றங்கள் ஏற்படும் எனினும்,வடக்கு கடல் எல்லை தொடர்பில் சார்க் மாநாட்டில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார