தனக்குச் சரியெனப்பட்டதை எந்தவித தயக்கமுமின்றி பகிரங்கமாகக் கூறும் வல்லமை முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ணவுக்கு அடுத்தபடியாக இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு மட்டுமே உண்டு எனத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன படையினர் முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைக்கு மாசுகற்பிக்க முயற்சி செய்வோர் விடயத்தில் அவர் கடுமையான போக்கைக் கடைப்பிடிப்பவராகவே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தனது அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது பாதுகாப்புச் செயலாளர் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளர் அரசியல்வாதியல்ல. ஒரு அதிகாரியாவார். அவர் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது. ஆனால் அவரது கருத்துகளில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. அரசாங்கம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சில ஊடகங்கள் உள்ளூரிலும், சர்வதேசத்திலும் தவறான தகவல்களை தெரிவித்துவருகின்றன. அதனைக் கண்டிப்பது தவறாக முடியுமா? எனக் கேட்கவிரும்புகிறேன்.
முன்னாள் அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ண எந்த விடயத்தையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுபவராவார். அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் ஜே.வி.பி.யை சேர்ந்த இளைஞர்கள் கொல்லப்பட்டபோது அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ரஞ்சன் விஜேரட்ணவிடம் ஜே.வி.பி. இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு அரசுதானே பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். அதற்கு சட்டெனப்பதிலளித்த ரஞ்சன் விஜேரட்ண ஆமாம் அரசுதான் பொறுப்பேற்கின்றது.அதிலென்ன தவறு. வன்முறை, பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை தாலாட்டவா சொல்கிறீர்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோன்றுதான் இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் செயற்படுகிறார். யுத்தத்தை விமர்சித்து அதற்கு மாசு கற்பிக்க முயற்சி செய்வோர் விடயத்தில் அவர் கடுமையான போக்கை கடைப்பிடிக்கிறார். இதில் எந்தத் தவறுமில்லையே. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கே யுத்தம் நடத்தப்படுகிறது. எந்தவொரு இனத்துக்கும் எதிராக நாம் போர் தொடுக்கவில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார