“அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” – வீரசேகரவுக்கு எம்ஏ.சுமந்திரன் பதில் !

“அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” என்று எம்.ஏ. சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

“புலிகளை நினைவேந்திய சுமந்திரன் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் ?  அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே  எம்.ஏ. சுமந்திரன் மேற்கன்டவாறு நேற்று  பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசியதாவது,

“அமைச்சருக்கு இந்த விடயத்தில் பதில் தர வேண்டிய கடப்பாடு ஏதும் எனக்குக் கிடையாது. எனினும் இவ்விடயத்தில் என் பெயர் பகிரங்கமாக பிரஸ்தாபிக்கப்பட்டமையால் நான் பதில் தருகின்றேன். 1985 இல் உயிரிழந்த பண்டிதர் என்பவரின் 83 வயதுத் தாயான சின்னத்துரை மகேஸ்வரி என்ற வயோதிப மாதுவுக்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினேன். அவர் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதத்தில் தனது மகனுக்கு நினைவஞ்சலி செய்வது வழமை.

அவரின் மகன் விடுதலைப் புலிகளின் ஒரு தலைவர்தான். ஆனாலும் அந்த வயோதிபர் தாயைப் பொறுத்தவரை அவர் அந்தத் தாயின் மகன்தான். ஒவ்வொரு தாய்க்கும் தனது பிள்ளைகளை நினைவேந்த உரிமையுண்டு. ஜே.வி.பி. அதன் தலைவரான றோஹண விஜயவீரவை, கொழும்பு வீதிகள் எங்கும் அவரின் உருவப்படங்ள், சித்திரங்ளை அலங்கரித்து நினைவு கூர்வது குறித்து, இந்த அமைச்சர் ஒரு கேள்வி தன்னும் எழுப்பியவர் அல்லர்.

அதனால்தான் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதில் கூட இந்த நாட்டில் தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுகின்றார்கள், ஒதுக்கப்படுகின்றார்கள் என்று நான் இந்தச் சபையில் கூறினேன். அத்தகைய கீழ்த் தர நடத்தையைக் கொண்ட இந்த அமைச்சர்தான், அந்தத் தாய் தனது மகனை நினைவேந்தல் செய்தபோது நான் அவருடன் கூடவே நின்றமையை இங்கு கேள்விக்கு உட்படுத்துகின்றார்.

அந்தத் தாய் தனிப்பட்ட முறையில் தனது மகனுக்கு நினைவேந்தல் செய்யும் முழு உரிமையும் உண்டு என்று முதல் நாள்தான் மேல்நீதிமன்றம் தனது உத்தரவில் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. அந்த நினைவேந்தலைத்தான் அத்தாய் தனது வீட்டில் – அது வீடு என்றும் கூறமுடியாது ஒரு கொட்டில் அவ்வளவுதான் – அதில் மேற்கொண்டார். நான் அவருடன் கூட இருந்தேன்.

இந்த நினைவேந்தல் நிகழ்வு பொது இடங்களில் செய்யப்பட முடியாது. தனித்து வீட்டில் செய்யலாம் என்பதை அந்தத் தாய்க்கு விளங்கப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நீதிபதி என்னிடம் விசேடமாக கோரியிருந்தார். அந்த நிகழ்விலேயே நான் பங்குபற்றினேன். அது தனிப்பட்ட நிகழ்வு. அந்த நிகழ்வுப் படங்களைப்பாருங்கள். அவரின் மகன் சீருடையில் கூட இருக்கவில்லை. இது ஒரு மகனுக்காக தாய் ஆற்றிய நினைவேந்தல் நிகழ்வு.

அவருக்காக நான் முதல் நாள் மன்றில் முன்னிலையாகியிருந்தேன். அந்த நிகழ்வை தனிப்பட்ட முறையில் வீட்டில் அவர் நடத்தலாம் என்பதை அவருக்கு விளங்கப்படுத்துமாறு நீதிமன்றே என்னை விசேடமாகக் கோரியிருந்தது. இதனை சர்ச்சைக்குரிய விடயமாக நிலையில் கட்டளையின் கீழ் இங்கு எழுப்ப முடியாது. என்றாலும் கீழ்தரனமான முறையில் அமைச்சர் அதனை முன்னெடுப்பது முற்றிலும் தவறு” என்றார் சுமந்திரன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *