இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான 2-வதும் தீர்க்கமானதுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா 4 இலக்குகள் இழப்பிற்கு 389 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்ரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 64 பந்தில் 104 ஓட்டங்களும், டேவிட் வார்னர் 83 ஓட்டங்களும், ஆரோன் பிஞ்ச் 60 ஓட்டங்களும், மார்னஸ் லாபஸ்சேன் 70 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 63 ஓட்டங்களும் அடித்தனர்.
இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 7 பந்துப்பரிமாற்றங்களில் 70 ஓட்டங்களும், பும்ரா 10 பந்துப்பரிமாற்றங்களில் 79 ஓட்டங்களும், முகமது ஷமி 9 பந்துப்பரிமாற்றங்களில் 73 ஓட்டங்களும் விட்டுக்கொடுத்தனர்.
பின்னர் 390 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அகர்வால் 26 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 30 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து விராட் கோலி உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. அடித்து விளையாட நினைக்கும்போது 38 ஓட்டங்களில் வெளியேறினார் ஷ்ரேயாஸ் அய்யர்.
4-வது இலக்குக்காக விராட் கோலி உடன் கே.எல் .ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் 35-வது பந்துப்பரிமாற்றத்தின் 5-வது பந்தில் 89 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்தியா 4 இலக்குகள் இழப்பிற்கு 225 ஓட்டங்கள் எடுத்திருந்தது, கே.எல்.ராகுல் 66 பந்தில் 76 ஓட்டங்களும், ஹர்திக் பாண்ட்யா 28 ஓட்டங்களும், ஜடேஜா 24 ஓட்டங்களும் அடிக்க இந்தியாவால் 50 ஓவரில் 9 இலக்குகள் இழப்பிற்கு 338 ஓட்டங்களே அடித்தது.
இதனால் அவுஸ்ரேலியா 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.