யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து தற்போது காஸாவில் இஸ்ரேல் இராணுவம் இல்லை. காஸா மக்கள் தங்களது சொந்தங்கள் சொத்துக்களைத் தேடி அலைகின்ற வேளையில் இடி பாடுகளுக்கிடையில் சிக்குண்ட சடலங்களையும் மீட்கும் பணிகள் இடம்பெற்றன. நாட்கள் கடந்த நிலையில் மீட்டெடுக்கப்படும் சடலங்கள் உருக்குலைந்து அழுகியுள்ளன. இதனால் பிரேதங்களை அடையாளம் காண முடியாதுள்ளது. இடிந்த வீடுகள், தொழிற்சாலைகளைக் கண்ட மக்கள் தலையில் அடித்து கதறி அழுதனர். இதுவரையான கணக்கெடுப்பின்படி காஸாவில் 1284 பேர் பலியானதாகவும் இவற்றில் 894 பேர் அப்பாவிப் பொதுமக்கள் என்றும் 280 பேர் குழந்தைகள் எனவும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.
இஸ்ரேல் தாக்குதலின் போது பொஸ்பரஸ் கலந்த இரசாயனக் குண்டுகளைப் பாவித்ததாகவும் இதனால் ஏராளமான காஸா மக்கள் எரி காயங்களால் அவதிப்படுவது பற்றியும் தகவல்கள் கசிந்துள்ளதால் சர்வதேசத்தின் கண்டனங்களுக்கு இஸ்ரேலியத் தலைவர்கள் உள்ளாகியுள்ளனர். மருத்துவர்கள், மீட்புப் பணியாளர்கள் பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளதை நிரூபித்துள்ளனர். இதனால் குழப்பமுற்ற இஸ்ரேல் அரசு இது தொடர்பான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அப்பாவிகள் தாக்கப்பட்டதை ஏற்க முடியாது. சுமார் 500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதுடன் ஏராளமான சுரங்கப் பாதைகள் அழிக்கப்பட்டதாகக் கூறும் இஸ்ரேல் இடிபாடுகளைத் துப்புரவு செய்யும் ஒளி நாடாக்களை தொலைக்காட்சியில் காட்டியது.
பெரும்பாலானோர் சுரங்க இடிபாடுகளைத் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடுவதே தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இஸ்ரேலின் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளை பக்கச் சார்பின்றி முன்னெடுக்க ஐ. நா.வும் ஒத்துழைப்பு வழங்குவுள்ளதாக அறவித்துள்ளது. சட்ட ரீதியான ஆயுதங்களையே தாம் பயன் படுத்தியதாக இஸ்ரேல் கூறுவதை அனேக நாடுகள் ஏற்க மறுக்கின்றன. இவ்வாறான நிலையில் வெளிநாட்டமைச்சர் சிபிலிவின் சர்வதேச நாடுகளிடம் ஹமாஸின் ஆயுதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தனக்கு வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.