முல் லைத்தீவு மேற்குப் பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்குப் பகுதியில் 50 வீதமான இடம்பெயர்ந்தவர்கள் உள்ளதனால் அப்பகுதியையும் பாதுகாப்பு வலயமாக்குவதன் மூலம் அங்குள்ளவர்களை பாதுகாக்க முடியுமென முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் உப தலைவியான வலேரியா பெட்டியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு அரச அதிபர் வெள்ளிக்கிழமை மாலை வவுனியா செஞ்சிலுவைச் சங்கப் பிராந்திய அலுவலகத்தில் வைத்து அவரை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மேற்குப் பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியான அம்பவன்பொக்கன், முள்ளிவாய்க்கால், மாத்தளன் மற்றும் வளையார்மடம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்தவர்களில் 50 வீதமானவர்கள் தங்கியுள்ளனர். இப்பகுதியையும் பாதுகாப்பு வலயமாக்குவதன் மூலம் இங்கு இடம்பெயர்ந்து தங்கியிருப்போரை பாதுகாக்க முடியும்.
அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் நெருக்கமாகவுள்ளதாலும் வெள்ளப்பாதிப்பு காரணமாகவும் முக்கியமாக குடிநீர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்ததுடன் மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் புதுக்குடியிருப்பு உணவு களஞ்சியசாலையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் இதனை பாதுகாப்பு வலயப்பகுதியில் நிறுவுதல் அவசியம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். மேலும் உணவுத் தொடரணி செல்லும் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் இருசாராரும் மோதலில் ஈடுபடுவதால் இருதரப்பின் உத்தரவாதத்துடன் உணவு தொடரணி எடுத்துச் செல்வது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்