இந்தியாவின் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 6-வது நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி-அரியானா எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காசியாபாத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா வீட்டில் வைத்து உள்துறை, பாதுகாப்புத்துறை, வேளாண்துறை மந்திரிகள் இணைந்து விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையில், விவசாயிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் கோரிக்கையை விவசாய குழுக்கள் நிராகரித்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இன்று மீண்டும் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகிய மந்திரிகள் டெல்லியில் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா வீட்டில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜே.பி நட்டாவும் பங்கேற்றுள்ளார். இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மற்றும் வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரலாமா? உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கத்தொடங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக இன்று கனடாவில் வாழும் சீக்கியர்களுக்கு குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்தியான விவசாயிகள போராட்டங்களை அங்கீகரிக்காமல் நான் என் பேச்சை தொடங்கினால் அது பொறுப்பானதாக இருக்காது. அங்குள்ள நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குடும்பங்கம் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.
உரிமைகளை பாதுகாக்க அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும். பேச்சுவார்த்தை மீது நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்.
ஆகையால், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெவ்வெறு வழிகளில் இந்திய அரசை தொடர்பு கொண்டு எங்கள் கவலையை வெளிப்படுத்தினோம்” என அவர் தன்னுடைய ஆதரவுக்குரலை வெளியிட்டுள்ளார்.