“யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும்” என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் யாழ்.இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இராணுவத்துக்கு இளைஞர்,யுவதிகளைஇணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று(01.12.2020) இடம்பெற்றது.
இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த வாய்ப்புக் காணப்படுகின்றது. எனவே பிரதேச மட்டங்களில் கிராமசேவகர்கள் குறித்த ஆள் சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புச் சிக்கல் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என்றார்.