ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியான மொசென் பக்ரிசாதே கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான் அணு விஞ்ஞானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் எனவும் சூளுரைத்துள்ளது.
இந்நிலையில் “ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கையின் கண்டன அறிக்கையில், “டாக்டர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதை இலங்கை கண்டிக்கிறது. பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதையும், மனிதகுலத்திற்கு எதிரான எந்தவொரு பயங்கரவாதச் செயல்களையும் இலங்கை கண்டிக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு இலங்கை அழைப்பு விடுக்கிறது.அத்துடன், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மிக வெற்றிகரமான வழிமுறையாக உரையாடல் மற்றும் ஈடுபாட்டை இலங்கை உறுதியாக நம்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.