ஒரே நாளில் 800க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று – 124 ஆக அதிகரித்தது கொரோனா உயிர்பலி !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.மேலும்  இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான பெண் நவம்பர் மாதம் 30ஆம் திகதி சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமையினால் ஏற்பட்ட மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் நிமோனியா ஏற்பட்டமை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்று மட்டும் 878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 861ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 410ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை 18 ஆயிரத்து 304 பேர் , கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 982 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சின் கவனயீனமான செயற்பாட்டினால் இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக சமூகத்தினிடையே பரவும் அபாயம் உள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஹரித்த அலுக்கே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *