“எமது பகுதியில் தொழிற்சாலைகள் இருந்த இடங்களில் இராணுவ முகாம்களே காணப்படுகின்றன”என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று(04.12.2020) நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள போதும் எமது பகுதியில் தொழிற்சாலைகள் இருந்த இடங்களில் இராணுவ முகாம்களே காணப்படுகின்றன. பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகிய தொழிற்சாலைகளில் தொழில் முயற்சிகளை முன்னெடுக்க முடியாத நிலை தொடர்கின்றது. மேற்படி தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதினூடாக வேலையற்ற இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க முடியும்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொழில்சார் சூழலை உருவாக்கும் வாய்ப்புகள் பல இருந்தாலும் ஏதோவொரு காரணத்துக்காக அவை முடக்கப்பட்டு வருகின்றன. அரசு அரசியல் ரீதியாக அன்றி, ஜனநாயக அடிப்படையில் செயற்பட வேண்டும். வடக்கு அல்லது கிழக்கில் கைத்தொழில் வலயமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ளனர். அரசு அவர்களையும் தேசிய பொருளாதார அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள வேண்டும்”எனவும் குறிப்பிட்டுள்ளார்.