“மக்களை ஏமாற்றுகின்ற ஒரு பொருளாதார கொள்கையை அரசு கடைப்பிடிக்கின்றது” – பாராளுமன்றில் சஜித்பிரேமதாஸ !

“மக்களை ஏமாற்றுகின்ற ஒரு பொருளாதார கொள்கையை அரசு கடைப்பிடிக்கின்றது” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில், வர்த்தக அமைச்சுக்கள் மற்றும்  இராஜாங்க அமைச்சுகக்ளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு அதிகாரத்துக்கு வந்து முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகத்தை வெளியிட்டிருந்தது. அது – 1.6 ஆகவே இருந்தது. ஆனால், 2 மற்றும் 3ஆம் காலாண்டு பொருளாதார அபிவிருத்தி வேகத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஏன் இதனை மறைக்கவேண்டும். புள்ளிவிபரங்களை மறைப்பது பொருளாதார சந்தையில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை 9 வீதத்தில் இருந்து 14 வீதம் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி முடியும்?

இந்த அரசின் வரிக்கொள்கை புதிய லிபரல்வாத கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவே தெரிகின்றது. அரசு மேற்கொண்டுள்ள வரிக்குறைப்பின் மூலம் நாட்டின் வருமானம் 600 தொடக்கம் 800 மில்லியன் ரூபா வரை இல்லாமல்போயுள்ளது. தனவந்தர்களைப் போஷிப்பதற்கே இதை அரசு செய்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் எவ்வாறு உள்நாட்டு உற்பத்தியை 9 வீதத்தில்  இருந்து 14 வீதம் வரை அதிகரிக்க முடியும்? மக்களை ஏமாற்றும் கொள்கையையே அரசு மேற்கொள்கின்றது.

அரசு வித்தியாசமான பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றி வருகின்றது. இறக்குமதிகளைத் தடைசெய்திருக்கின்றது. சர்வதேச நிலைப்பாடுகளை மதிக்காமல் பொருளாதார அபிவிருத்தியை கொண்டு செல்லவே அரசு முயற்சிக்கின்றது. தேசிய பொருளாதார தரப்படுத்தல் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் சர்வதேச மூதலீட்டாளர்களைக் கொண்டுவர முடியுமா?

அரசின் இறக்குமதி தடைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கைக்கு அரசின் பதில் என்ன? ஐரோப்பிய நாடுகள் எமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு மிகவும் சக்தியாக இருக்கின்றன. அரசின் நிலைப்பாட்டால் ஐரோப்பிய சந்தைகள் எமக்கு இல்லாமல் போகும்.

அதனால் அரசின் இந்த நிலைப்பாடு தொடர்ந்தால் எமது நாடும் வடகொரியாவுக்கு நிகரான பொருளாதார நிலைக்கே செல்லும். இது அரசின் இயலாமையாகும். இது வங்குரோத்து அரசு – தோல்வியுற்ற அரசாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *