தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கட்சியைத் தடை செய்தே தீருவோம்’ என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் அங்கததவர்கள் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது ,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியாகச் செயற்பட்டதில்லை. கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதை விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி என்று எவரும் அழைக்க முடியாது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச அப்போது ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரச குழு பல தடவைகள் பேச்சுக்களை நடத்தியதை சரத் வீரசேகர உள்ளிட்ட ஆளுந்தரப்பினர் நினைவில்கொள்ள வேண்டும்.
கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி என்றபடியாலேயே அன்று எம்முடன் மஹிந்த அரசு பேச்சு நடத்தியது. இன்றும் நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் உண்மையான – நேர்மையான – நீதியான பேச்சுக்குத் தயாராகவே இருக்கின்றோம்.
இந்தநிலையில், நாடாளுமன்றத்திலுள்ள ஆளுந்தரப்பினர் கருத்துக்களை வெளியிடும்போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். வாய்க்கு வந்த மாதிரி இனவாத ரீதியில் கருத்துக்களை வெளியிடுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும்” – எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.