அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் இந்தியஅணியில் களமிறங்கியிருந்த தமிழகவீரர் நடராஜன் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். மிக பின்தங்கிய குடும்பத்தில் இருந்து இவ்வளவு தூரத்துக்கு முன்னேறியுள்ள நடராஜன் நடைபெற்று முடிந்த தொடரில் மொத்தமாக 06 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலி கூறுகையில், “பும்ரா மற்றும் சமி இல்லாத சூழலில் சிறந்த முறையில் நடராஜன் விளையாடினார். நெருக்கடியான நிலையில் உண்மையில் நின்று விளையாடினார். சர்வதேச அளவில், நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அவர் மிக தேர்ந்தவராக, கடின உழைப்பு மற்றும் பணிவு கொண்டவராகவும் இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுகை பந்து வீச்சாளர் என்பவர் எப்பொழுதும் அணிக்கு கிடைக்க கூடிய ஒரு சொத்து. இதேபோன்று களத்தில் அவரது ஆட்டம் தொடர்ந்து வெளிப்பட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
அதே நேரம் நேற்றைய போட்டி முடிவில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், 20 ஓவர் தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.