“அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கமும் அரசுக்கு இல்லை” என அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (08.12.2020) அரச தகவல் திணைக்களத்தினால் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாட்டின் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. ஆகவே அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை பூச்சியமாகவுள்ளது. தமது தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்களே அரசியல் கைதிகள் எனப்படுவர்.
ஆனால் நாட்டின் அரசமைப்பின் அடிப்படையில் பார்க்கும்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே நாட்டின் சிறைகளில் உள்ளனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டியது அவசியமானதாகும். அத்துடன், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கமும் அரசுக்கு இல்லை.
எந்தக் கைதிகளும் சிங்கள, தமிழ் கைதிகள் என வேறுபடுத்தப்படுவதில்லை. மாறாக அவர்களது குற்றச்செயல்களின் அடிப்படையிலேயே சிறை வைக்கப்படுள்ளனர். அந்த வகையில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை கைதிகளின் நடத்தை தொடர்பான அறிக்கையின்படி அவர்களின் தண்டனைக் காலத்தை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
ஆனால் கடந்த காலத்திலிருந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே தான் சிறைச்சாலைகள் அமைச்சர் இந்த நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளார். அதற்கமைய மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அவர்களது நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகவும், பின்னர் ஆயுள் தண்டனை வருட அடிப்படையில் 20 வருட தண்டனையாகவும் குறைக்கப்படும் .
இந்தச் செயற்பாடுகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பொருந்தாது. ஆனால் போதைப்பொருள் பாவனையாளர்கள் இதனுள் உள்ளடக்கப்படுவர். அவர்களுக்கு புனர்வாழ்வழிக்கும் நடவடிக்கை இடம்பெறும்” என்றார்.
அதே நேரம் தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்குமாறு கோரி இன்றையதினம் (09.12.2020) தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து சந்திப்பை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.