“நாம் ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” – சர்வதேச மனித உரிமைகள் தின அறிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ !

“நாம் ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

1950 டிசெம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317 வது கூட்டத் தொடரில் சர்வதேச மனித உரிமை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் யோசனை திட்டத்தின் 423 பிரிவுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் டிசெம்பர் 10 ஆம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொண்டன.

அனைத்து இனத்தவர்களுக்கும் மனித உரிமைகளை உறுதிசெய்தல், உலகளாவிய ரீதியில் எழும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஆகியவை சர்வதேச மனித உரிமை தினத்தின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடான இலங்கை, மனித உரிமை கொள்கைகளை 1955 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. நிலைபேறான அபிவிருத்தி கொள்கையில் மனித உரிமை கொள்கை முன்னுரிமையில் உள்ளது. மனித உரிமை கொள்கையில் ஒற்றுமை, சமத்துவம், கௌரவம், பொறுப்பு மற்றும் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தவாறு அரசு செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும். அரசு என்ற வகையில் நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும். ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம். கொரோனா வைரஸ் தாக்கத்தால் எவரது அடிப்படை உரிமைகளும் மீறப்படவில்லை. மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயல்படும்.

சுபீட்சமான எதிர்காலம் என்ற கொள்கையின் கீழ் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *