“ஒரு சிலர் உங்களுக்காக வாலாட்டுவார்கள்.உண்மையான தமிழர்கள் ‘தமிழன்’ என்ற அடையாளத்துடன் வாழவே விரும்புகின்றனர்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய (10.12.2020) பாராளுமன்ற அமர்வில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தெரிவித்ததாவது,
“போர் முடிவுற்றபோது சரணடைந்த விடுதலைப்புலி போராளிகளைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்திருந்தீர்கள். அந்த நேரம் அவர்களுக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்றும் சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்பில் பிரதமரை நேரில் சந்தித்து எழுத்து மூலமாகக் கடிதமொன்றை கொடுத்திருந்தோம். எனவே, பிரதமர் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
வடக்கு மக்களுக்கு மூன்று வேளை உணவே போதுமானது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தார். இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஒரு சிலர் உங்களுக்கு ஆதரவாக வாலாட்டுவார்களே தவிர, உண்மையான தமிழர்கள் ‘தமிழன்’ என்ற அடையாளத்துடன் வாழவே விரும்புகின்றனர் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதேபோல் அமைச்சர் சரத் வீரசேகரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். இது அவரது தனிப்பட்ட கருத்தா? அல்லது அரசின் நிலைப்பாடா? எனப் பிரதமர் அறிவிக்க வேண்டும்.
மன்னார் – வங்காலை இராணுவச் சோதனை சாவடிப் பகுதியில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். முகக்கவசம் அணியவில்லை, அடையாள அட்டை இல்லை எனக் கூறித் தாக்கியுள்ளனர். எமது மக்களைத் தாக்க வேண்டும் என்ற அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? இந்த ஆட்சியில்தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன” எனவும் குறிப்பிட்டுள்ளார்.