“அபிவிருத்தி என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டமே வடக்கில் இடம்பெறுகின்றது” – பாராளுமன்றில் த.சித்தார்த்தன் !

“அபிவிருத்தி என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டமே வடக்கில் இடம்பெறுகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம்(11.12.2020) கருத்து  தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அபிவிருத்தி என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டமே வடக்கில் இடம்பெறுகின்றது. அதிலும் தற்போது கோப்பாய் பிரதேச சபைக்கு கீழ் இருக்கும் அம்மன் வீதி, இதனை அமைப்பதற்காக வீதி அதிகார சபையினூடாக அரசு அடிக்கல் நாட்டியிருந்தது. அத்துடன் பெயர்ப்பலகை ஒன்றையும் வைத்திருந்தார்கள். குறித்த வீதி வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குக் கீழ் இருப்பதால் அது தொடர்பான அனுமதியை பிரதேச சபையிடம் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு இடம்பெறாததால் பெயர்ப்பலகையை பிரதேச சபை நீக்கியிருந்தது. அது பாரிய பிரச்சினையாக மாறியது.

பிரதேச சபை தவிசாளரைக் கைதுசெய்ய காவற்துறையினர் முயற்சி செய்தனர். இதையடுத்து நீதிமன்றம் தவிசாளருக்கு முன் பிணை வழங்கியுள்ளது. இந்த விடயமானது மத்திய அரசு, பிரதேச சபையின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும்.

கடந்த அரசு கம்பரெலிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும்போது பிரதேச சபைகள் ஊடாகவே அதனை முன்னெடுத்தது. வடக்கில் தொழில் இல்லாத பிரச்சினை இருக்கின்றது. இளைஞர்களுக்குத் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முதலீட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

எமது மக்கள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்து வாழ விருப்பம் தெரிவித்திருக்கின்றபோதும், அந்த வசதிகள் அங்கு இல்லாமல் இருக்கின்றன.

அதே போன்று வீடமைப்புத் திட்டத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் பல இன்னும் பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றையும் பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், வடக்கில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்கள் இருக்கின்றனர்.

அரசின் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்களின் போது வெளிநாட்டுப் பட்டதாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகவும் கவனம் செலுத்தி அந்தப் பட்டதாரிகளையும் அரசு வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கும் தொழில் வாய்ப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும்”  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *