புதிய பாடத்திட்டத்திற்கும், பழைய பாடத்திட்டத்திற்கும் வேறுபாடுகள் காணப்படுவதாகவும், இதனால் மதிப்பெண்களுக்கு இடையே பாரிய வித்தியாசங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டி 2019 ஆம் ஆண்டில், உயர்தர பரீட்சைக்கு, புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றி சித்தியடைந்த மாணவர்களினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு, புவனேக அலுவிஹாரே, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோத்தாகொட ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் தமக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளதாகவும், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தாம் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும், பெளதீகவியல் மற்றும் பொறியயில் பீடங்களுக்கு அரச பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதில் அநீதி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இரண்டு பாடத்திட்டங்களுக்கும் சமனான அல்லது நியாயமான Z மதிப்பெண்களை வழங்கும் வகையில், உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன். இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, பெளதீகவியல் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, இடைக்கால தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் ஜீ.எல் பீரிஸ், கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 25 பேர், மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.