“யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும்” – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

“யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும்” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரியுள்ளார்.

யாழ். மருதனார்மடத்தில் திடீரெனக் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்தார்கள். இந்தநிலையில், இங்கு பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் பகுதியிலிருந்து கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள் என்ற தகவல் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் வெளியில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கக் கூடும். தொற்றாளர்கள் தாம் சென்று வந்த இடங்கள் தொடர்பில் எதையும் மறைக்காமல் உண்மைகளைக் கூற வேண்டும்.

வர்த்தகர்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். அவர்கள் வெளியிடங்களில் வர்த்தக ரீதியில் தொடர்புகளை வைத்திருப்பவர்கள். அவர்கள் அனைவரும் பீ.சி.ஆர். பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

அதேவேளை, புதிய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி பீ.சி.ஆர். பரிசோதனையைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில் யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும், சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் கடமைகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மினுவாங்கொடை, பேலியகொட போல் பெரிய கொத்தணிகளைப் போன்றோ அல்லது அக்கரைப்பற்று போல் சிறிய கொத்தணியைப் போன்றோ ஒரு நிலைமை யாழ்.குடாநாட்டிலும் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என இங்குள்ள மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *