“தமிழ் மீனவர்களை  பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டி எழுப்புகின்ற பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது” – மாவை சேேனாதிராஜா 

“இலங்கைத் தமிழ் மீனவர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புகின்ற பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளது  ” இந்தியாவின் பொறுப்புவாய்ந்த அதிகாரியிடம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் மாவை சோனாதிராசா அவர்களைச் சந்தித்து 14.12.2020 நேற்றைய தினம் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார்.

அவ்வாறு தொடர்பினை ஏற்படுத்தியிருந்த குறித்த பொறுப்புவாய்ந்த அதிகாரி ரவிகரனுடன் பேசும்போது, கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசம் மற்றும் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஊடகங்களில் பார்வையிட்டதாகவும், இலங்கை மீனவர்களின் கோரிக்கை நியாயமானது எனவும் அதனைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கையினைக் கட்டுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளைத் தாம் முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா குறித்த அதிகாரியுடன் பேசும்போதே இலங்கை மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டி எழுப்பும் விடயங்களில் இந்திாவிற்குப் பொறுப்பிருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மாவை சேனாதிராசா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.

வரலாறு முழுவதும் போர்க்காலத்திலும், இயற்கை அனர்த்தத்திலும், குறிப்பாக சுனாமி அனர்த்தக் காலத்திலும் கரையோர பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்துப் பாதிப்புக்களுக்கும் மீனவர் சமூகமே முகங்கொடுத்துவருகின்றது.

எனவே அவர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டி எழுப்புகின்ற பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது என்பதை இந்திய அரசுக்கு நீங்கள் சிபாரிசு செய்யவேண்டும். என குறித்த பொறுப்பு வாய்ந்த இந்திய அதிகாரியிடம் மாவை சேனாதிராசா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *