பிரித்தானியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தலைநகர் லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
லண்டனில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதால் அங்கு 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி மெட் ஹன்ஹாக் கூறியதாவது:-
லண்டன் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் 3 அடுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்கள், மால்கள் மூடப்படும். பொது இடங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் புதிய மாறுபாடு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் தெற்கு இங்கிலாந்தில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்க கூடும்.
சில இடங்களில் ஒவ்வொரு வாரமும் பாதிப்பு 2 மடங்காகி வருகிறது. மக்களை பாதுகாக்கவும், அதிக அளவு பாதிப்புகளையும், நீண்ட கால பிரச்சனைகளையும் குறைக்க முடியும் என்பதால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.