‘தமிழ் அரசியல் கைதிகள்’ என்ற பெயரில் சிறைச்சாலைகளில் காலத்தைக் கழிக்கின்ற தமிழ்க் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து ஜனாதிபதி விடுவித்தால் அதை நாம் எதிர்க்க மாட்டோம்” என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசியல் பழிவாங்கல் காரணமாக நானும் சிறையில் சில காலத்தைக் கழித்தேன். அவ்வேளையில் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பலருடன் நேரில் பேசியிருக்கின்றேன். அவர்கள் தங்கள் துயரங்களை நேரில் என்னுடன் பகிர்ந்தார்கள். அவர்களில் சிலர் 15 வருடங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
குற்றம் செய்தார்களோ இல்லையோ அவர்கள் சிறைகளில் பல வருடங்கள் தண்டனைகளைப் பெற்று விட்டார்கள். எனவே, அப்படியானவர்களை அரசியல் தீர்மானம் எடுத்து ஜனாதிபதி விடுவித்தால் அதற்கு நாம் ஆட்சேபனை தெரிவிக்கமாட்டோம்.
எமது இந்த நிலைப்பாட்டை தமிழ் அரசியல்வாதிகள் சிலரிடமும் நாம் தெரிவித்திருக்கின்றேன்.
ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் பலர் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை தமது அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர். அதனால் சிறைகளில் பல வருடங்கள் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசிடம் நாம் நேரடியாகத் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவித்தால் அந்த விடயத்தைத் தமிழ் அரசியல்வாதிகள் தலையில் வைத்துக் கொண்டாடி இனமுறுகலை ஏற்படுத்தக்கூடாது.
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புனர்வாழ்வு வழங்கி விடுவித்த அரசு, தமிழ் அரசியல் கைதிகளையும் ஏதோவொரு விதத்தில் விடுவிக்க முடியும். எனினும், இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிதான் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்” – என்றார்.
அரசியல் கைதிகளுடைய விடுவிப்பு தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி தமிழ்அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும் என பல தமிழ் அரசியல் தலைவர்களும் இணைந்து பிரதமரிடம் மனு ஒன்றினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.