தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில் “தமிழர் என்பதற்காக இங்கு எவரும் கைது செய்யப்படவில்லை என்பதால் தமிழ்க் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை” அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார்.
சிறைகளில் அரசியல் கைதிகள் அவ்வாறு இருப்பார்களாயின் அவர்களில் ஒருவரின் பெயரையாவது வெளியிடுமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று(15.12.2020) அரச தகவல் திணைக்களத்தில் காணொளி மூலம் நடத்தப்பட்டது. இதன்போது, ‘இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என நீங்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தீர்கள். ஆனால், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். சுமார் 80 பேர் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. இந்த விடயத்தில் அரசின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்பதை அரசின் பேச்சாளர் என்ற வகையில் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.
தாம் வகிக்கும் அரசியல் நிலைப்பாட்டால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களையே அரசியல் கைதிகள் என விளிக்கலாம். சிங்கப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பின்னர், கம்யூனிஸ்ட் நிலைப்பாட்டை – சித்தாந்தங்களைக் கொண்டிருந்தவர்கள், இரகசியமாக அரசியலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அவ்வாறானவர்கள்தான் அரசியல் கைதிகள்.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜே.வி.பி., கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகியன தடைசெய்யப்பட்டன. கட்சிகளின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் குற்றங்கள் இழைக்கவில்லை. மேற்படி கட்சியில் இணைந்தமை, தலைவராகியமை, கொள்கைகளை முன்னெடுத்தமை ஆகியவற்றுக்காகவே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இப்படியானவர்கள்தான் அரசியல் கைதிகளாவர்.
தமிழர் என்பதற்காக இங்கு எவரும் கைது செய்யப்படவில்லை என்பதால் தமிழ்க் கைதிகள் என எவரும் இல்லை. அரசியல் கைதிகளும் இல்லை.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் இருக்கலாம். குற்றமிழைத்தவர்கள் இருக்கலாம். அவ்வாறான கைதிகளை ஆண் மற்றும் பெண் கைதிகள் என்ற வகையிலும், அவர்கள் இழைத்த குற்றங்களின் அடிப்படையிலும், அனுபவிக்கும் தண்டனை அடிப்படையிலும், வயது அடிப்படையிலுமே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாறாக இன ரீதியாக எவரும் வகைப்படுத்தப்படவில்லை.
சிறைகளில் அரசியல் கைதிகள் 80 பேர் இருக்கின்றனர் எனில், அவர்களில் ஒருவரின் பெயரையாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடட்டும். அப்போது அது பற்றி ஆராயலாம். எமக்குத் தெரியாமல்கூட யாராவது தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா? என்பது பற்றி விசாரணை நடத்தி உங்களுக்கும் அறிவிக்க முடியும்.
எனவே, ஒரு அரசியல் கைதியின் பெயரையும், அந்தக் கைதியின் இலக்கத்தையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கட்டும்.
பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் மகஜர்களைக் கொடுக்கலாம். அதனை அவர் ஏற்ற பின்னர் சம்பந்தப்பட்ட துறையிடத்தில் அது ஒப்படைக்கப்படும். அதன்பின்னர் அதிலுள்ள காரணிகள் ஆராயப்படும். செய்ய முடியுமா, முடியாதா என்று முடிவு எடுக்கப்படும். ஆகவே, பிரதமரிடம் மகஜர் கையளித்தால், அதிலுள்ள பிரச்சினைகளை, கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டு விட்டார் என அமையாது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் உள்ளனர். பயங்கரவாத சந்தேகநபர்கள், தண்டனை அனுபவித்தால் பயங்கரவாதிகள். அதைவிடுத்து அவர்களை அரசியல் கைதிகள் என விளிக்க முடியாது” – என்றார்.