பாகிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெண் தனது பிள்ளைகளுடன் லாகூருக்கு காரில் சென்றார். வழியில் கார் பழுதாகி நின்றது. அப்போது அங்கு வந்த கும்பல் அந்த பெண்ணை அவரது பிள்ளைகள் முன்பே பாலியல் பலாத்காரம் செய்தது. இதுபோன்று பல்வேறு பாலியல் வன் கொடுமைகள் நிகழ்ந்தன.
இதையடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட விதிமுறைகள் தயாரிக்கப்பட்டன.
இந்த புதிய சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையில் ஆண்மையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆணுக்கு அவரது ஆண்மை தன்மையை குறைக்கவோ அல்லது நீக்கவோ ரசாயன மருந்து கொடுக்கப்படும்.
இந்த முடிவை அரசு நியமித்த மருத்துவர் குழு தீர்மானிக்கும். பாகிஸ்தான் பாலியல் சட்டத்தின் படி ஒரு பெண்ணுடன் விருப்பத்துக்கு எதிராக ஆண் செயல்படுவது ஆசைக்கு இணங்காத போது வற்புறுத்தி பாலியலில் ஈடுபடுவது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து பாலியலில் ஈடுபடுவது. 16 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது ஆகியவை சட்ட விரோதமாக கருதப்படும்.
குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் சிறை என்பது இருக்கிறது. இதை புதிய சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட குற்றம் செய்த ஆணின் ஆண்மை தன்மை இரசாயன மருந்து மூலம் நீக்கப்படும்.
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டம் பாகிஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றவாளிகளை உடனே தண்டிக்கும் வகையில் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த அவசர சட்டத்தை முறையான சட்டமாக மாற்ற இம்ரான்கான் அரசுக்கு 120 நாட்கள் அவகாசம் உள்ளது.
அதற்குள் பாராளுமன்றத்தை கூட்டி முறையான சட்ட மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இந்த அவசர சட்டத்துக்கு பாகிஸ்தானில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.