ஆறு வயது சிறுவனுக்காக துபாய் பொலிஸார் செய்த நெகிழ்ச்சிகர செயல்! 

துபாயில் வசிக்கும் அரபு நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு சீருடையில் உள்ள போலீசாரை பார்த்து பயம். குழந்தையாக இருக்கும்போதே போலீசாரை பார்த்து மிரண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். அவனது பெற்றோர் எத்தனை சமாதானம் செய்தும், விளக்கமாக கூறியும் அந்த சிறுவனின் பயம் போகவில்லை.

இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் எதிர்காலத்தில் தனது மகனுக்கு எதிர்மறையான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தங்கள் மகனின் பயத்தை போக்க வேண்டும் என போலீஸ் துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை பெற்றுக்கொண்ட போலீஸ் துறையின் சமூக மகிழ்ச்சிப்படுத்தும் பிரிவின் பொது இயக்குனர் (பொறுப்பு) அலி கல்பான் அல் மன்சூரி தலைமையில் தனிப்படை போலீசார் சிறுவனின் வீட்டிற்கே சென்றனர்.

அவர்கள் கையோடு விளையாட்டு பொருட்களை கொண்டு சென்றனர். முதலில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று வேடம் அணிந்த ஒருவர் ஆகியோர் சிறுவனிடம் அன்பாகவும், வேடிக்கையாகவும் பேச்சு கொடுத்தனர். அந்த சிறுவனுக்கு பிரத்தியேகமாக தைக்கப்பட்ட போலீஸ் சீருடையை அணிவித்தனர். அந்த சிறுவனும் ஆர்வமாக அணிந்து கொண்டான்.

பின்னர், ரோந்து பிரிவில் பயன்படுத்தப்படும் சொகுசு காரில் அந்த சிறுவனை அமர வைத்தனர். தொடர்ந்து, அந்த காரில் அந்த வீட்டு பகுதியில் உள்ள சாலையில் அழைத்து சென்றனர். அப்போது சிறுவனிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சு கொடுத்து அவனிடம் இருந்த பயத்தை நீக்கி தைரியத்தை வரவழைத்தனர்.

போலீசாருடன் நட்பாக நீண்ட நேரம் சிறுவன் பேச்சு கொடுத்ததன் காரணமாக அவனிடம் இருந்த பயம் நீங்கி புன்னகை புரிந்தான். இதை பார்த்த பெற்றோர்கள் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் துபாய் போலீஸ் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் தங்கள் நன்றியினை தெரிவித்தனர்.

இறுதியில் அந்த சிறுவனுக்கு பரிசுபொருட்கள் மற்றும் நினைவுப் பரிசினை அதிகாரிகள் வழங்கினர். இந்த சம்பவத்திற்கு பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக அதில் பாதுகாப்பு பணி மட்டுமல்லாமல் சமூக பணிகளிலும் போலீசார் அக்கறை காட்டுவது சிறப்பாக உள்ளது என பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *