இங்கு பதிவிடப்பட்டுள்ள படங்கள் யாவும் யாழ்ப்பாண மாநகர வடிகால் துப்புரவுப்பணியின் போது குவிந்த பிளாஸ்டிக் உட்பட்ட கழிவுகள் மட்டுமேயாகும். இது போல துப்புரவு செய்யப்பட்ட இடங்கள் யாவிலும் அளவுக்கு அதிகமாகவே இந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
சரி விடயத்துக்கு வருவோம். இந்த படங்களை பதிவிட்டு பகிர்ந்து கேலி பேசிவரும் எம்மில் பலர் அதற்கு அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகர சபை மட்டுமே பொறுப்பு – ஒழுங்காக கழிவுகளை அகற்ற அவர்கள் தவறி விட்டார்கள் , Filter system அறிமுகம் செய்யப்படவில்லை என ஆளாளுக்கு அரசின் மீதும் ஏனையோர் மீதும் பழிகளை போட்டு விட்டு ஒதுங்கிக்கொள்ள பார்க்கிறோமே தவிர சரி இனிமேலாவது “குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போட முயற்சிப்போம் ” என எந்தக்கருத்துக்களையும் யாரும் முன்வைப்பதாக தெரியவில்லை.
அவ்வளவு தூரம் சுயநல சிந்தனையுள்ளோராக நாம் குறுகிவிட்டோம் என்பதை இம்முறை அதிகரித்த மழை நாட்களினுடைய யாழ்ப்பாணத்தின் நிலை தெளிவாக எடுத்துக்காட்டி நிற்கின்றன.
முக்கியமாக யாழ்ப்பாணத்தின் நகர்ப்புறப்புறங்களில் போகவழியில்லாது மழைநீர் தேங்கி வீடுகளே குளம் போல காட்சியளித்தது. தெருக்கள் அனைத்திலும் நிறைந்த தண்ணீர் போக வழியில்லாது வைத்தியசாலையையும் நிறைத்ததது. அதன் போதும் அரசின் மீதே பழிபோட்டு நகர நாம் முற்படுகிறோமே தவிர முறையான கழிவகற்றல் முகாமைத்துவம் பற்றி ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உணரத்தவறிவிடுகின்றோம்.
அதிலும் இம்முறை யாழ்ப்பாணத்தின் நகர்ப்புறங்கள் தொடங்கி நல்லூர் , மானிப்பாய், என பல இடங்களில் தேங்கிய நீர் நம்முடைய மனதும் பொதுநல சிந்தனையும் எவ்வளவு சுருங்கிப்போய்விட்டது என்பதை தெளிவாக காட்டியது. நகர கட்டமைப்பும், அதிக சனத்தொகையும் கொண்ட கொழும்பு, களுத்துறை, உள்ளிட்ட நகரங்களில் கூட இம்முறை பெரிதாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் கடல் பகுதி அண்மையிலுள்ள யாழ்ப்பாணத்தில் தண்ணீர் போக இடமில்லாத அளவுக்கு எங்களுடைய சுயநலம் தண்ணீரை மறித்து தேக்கி வீடுகளுக்குள் அனுப்பி விட்டது என்பதே உண்மை.
வாய்க்கால்கள் இருந்த – இருக்க வேண்டிய இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து நீண்டு கொண்டே செல்லும் எங்களுடைய கடைகள் மற்றும் கட்டிடங்களின் எல்லை , தண்ணீர் ஓட வழியே விடாது முழு நகரத்தினதும் சந்து பொந்துகளை கூட விடாது ஆக்கிரமித்து எழுப்பப்பட்டுள்ள மதில்கள், காணாமல் போன – போய்க் கொண்டிருக்கும் குளங்கள், குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போட இடம் கொடுக்காத மெத்தப்படித்த மேதாவித்தனம் என இப்படி எத்தனையோ காரணங்களின் சேர்க்கையே நாம் எதிர்கொண்ட இந்த வெள்ளப்பெருக்கின் பின்னணி. அதிலும் கொடுமை பலர் இதற்கும் அரசை திட்டியது தான்.
யாழ்.நகரத்தின் எல்லா பகுதிகளிலும் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு குப்பைகளை யார் இந்த வாய்க்கால்களுக்குள் கொட்டியது ..? நாம் ஒவ்வொருவரும் தான். அதிலும் பிளாஸ்டிக் போத்தல்களே அதிகம். யாரும் சமூக சிந்தனையோடு செயற்பட யோசிப்பதில்லை. நாம் சிறுக சிறுக வீசியெறிந்த போத்தல்களும் பொலித்தீன் பைகளுடைய சேர்க்கையுமே இந்த மழைநீர் தேக்கமும் அதன் மூலமான இடர்களும்.
நகரவடிகாலமைப்பு பற்றி கவனம் செலுத்தவேண்டியதற்கு பொறுப்பாக உள்ளவர்களுடைய மெத்தனப்போக்கும் இதற்கான ஒரு காரணமே தவிர அது மட்டுமே காரணமில்லை. முடியுமானவரை சூழல்பாதுகாப்பு தொடர்பாக கவனமாக இருப்போம்.
நீர் நிறைந்து வெளியேற வழியில்லாது உள்ளது என அலட்டிக்கொள்ளும் நாம் நம்முடைய வீடுகளை சுற்றிவர அடைத்துவிட்ட மதில்கள் பற்றி சிந்திப்பது கிடையாது. நம்மைப் போல ஒவ்வொருவரும் அடைத்து விட்ட இந்த மதில்களே பாதிக்காரணம் நீர்த்தேங்கி நின்று இடர் ஏற்பட. ஒருகாலம் வேலிகள் பயன்பாட்டில் இருந்த போது இப்படியான பிரச்சினைகள் எவையுமே ஏற்பட்டதில்லை. குளங்களை அழித்து விட்டோம். அது பற்றி சிந்திப்பதில்லை. குளத்து நிலங்கள் எல்லாம் கட்டிடங்களால் நிரப்பப்பட்டுள்ளன. நீர் ஓடாத படிக்கு வாய்க்கால்களை குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட முடியாத நம்முடைய மெத்தனத்தனத்தால் நிரப்பி விட்டோம். பிறகு என்ன..? நீர் வெளியேறவும் வழியிருக்காது. நீர் தேங்கவும் குளமிருக்காது.
சிந்திப்போம். அமெரிக்காவின் கமலாஹாரிஷ் தமிழர் என்று பாராட்டிக்கொண்டும் அமெரிக்காவில் உயர் பதவி வகிக்கும் யாழ்ப்பாணத்து தமிழர் என்றும் பெருமை பாடிக்கொண்டிருக்கும் நாம் தான் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாது செயற்படுகின்றோம்.
சரி பிறவிடயங்களை விடுவோம் இந்த குப்பைகள் வாய்க்கால்களில் அடைத்துப்போய் விட்டால் அதனை அள்ள வேண்டிய பணியில் ஈடுபடுவோரும் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து கொண்டாலே போதுமானது.
ஈரான் – அமெரிக்க பகையை ஆருடம் கூறி முன்னெச்சரிக்கையாக வாகனங்களில் பெற்றோலை நிரப்பி வைத்துக்கொள்ளும் அளவிற்கு எதிர்காலம் பற்றி சிந்திக்க தெரிந்த நாம் , கல்வி கற்ற சமுதாயம் என நம்மை நாமே பெருமை பாராட்டிக்கொள்ளும் நாம் இந்த கழிவகற்றல் முகாமைத்துவம் என்கிற விடயத்தில் அவ்வளவு சுயநலமாக நடந்துகொள்கிறோம் என்பது அவ்வளவு வேதனைப்பட வேண்டியதும் வெட்கப்பட வேண்டியதுமான விடயமாகும்.
இனிவரும் காலங்களில் சரி சிந்தித்து செயலாற்றுவோம். இப்போதும் சிந்தித்து செயலாற்ற தவறுவோமாயின் கடல்கொண்டு போன மதுரை நகர் போல கழிவுநீர் கொண்டு போன யாழ்ப்பாண நகர் என எதிர்கால சந்ததியினர் நகைக்க இடமுண்டு. எனவே நாம் சூழல் நேயமுள்ளோராக மாறுவதுடன் நம்மை சுற்றியுள்ளோரையும் சூழல்நேயமுள்ளோராக்க முயற்சிப்போம்…!