“மக்களின் காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் மக்கள் படை திரட்டி போராடவேண்டிய நிலை உருவாகும்” என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு உரித்தான நாகஸ்தன்ன தோட்டத்திலுள்ள காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கான அளவைப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இது பற்றி மக்களுக்கோ அல்லது உரிய தரப்புகளுக்கோ அறிவிக்காமல் மிகவும் சூட்சுமமான முறையிலேயே திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கண்டி மற்றும் கேகாலை ஆகிய இரு மாவட்டங்களுக்கும் உட்பட்டதாக குறித்த தோட்டம் இருந்து வருகின்றது. இவ்வாறான நயவஞ்சக நடவடிக்கைகளால் இப்பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நல்லாட்சியின்போது பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தனி வீடுகள் அமைப்பதற்கான காணிகள் ஒதுக்கப்பட்டு, மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், எஞ்சிய காணிகள் அம்மக்களுக்கே தலா 2 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது. அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்வேளையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
எனினும், இந்தத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஆளுங்கட்சி அமைச்சர்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தனர். அவ்வாறு உறுதியளித்துவிட்டு இன்று காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பது பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லில் ஒன்றையும் செயலில் வேறொன்றையும் செய்யும் நயவஞ்சக ஆட்சியே இது என்பது தற்போது புரிந்துவிட்டது.
எமது மக்களுக்கான காணி உரிமையை தாரைவார்க்க முடியாது. எனவே, வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் மக்கள் படை திரட்டி போராடவேண்டிய நிலை உருவாகும் என்பதனையும் கூறிவைக்க விரும்புகின்றோம்” – என்றுள்ளது.