உலக நாடுகள் அனைத்திலும் இன்றைய திகதிக்கு மிகப்பெரிய பேசுபொருளாகியிருப்பது கொரோனாவுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பானதாகவேயுள்ளது. இந்தநிலையில் இலங்கை அரசும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுதல், விநியோகம் மற்றும் பாதுகாப்பான நிர்வாகத்திற்காக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஐ.நா தூதுக்குழு குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரசியா பெண்ட்சே மற்றும் யுனிசெப் அமைப்பிற்கான இலங்கை பிரதிநிதி ஆகியோர் பிரதமரை இன்று சந்தித்தனர்.
ரஸ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்கை ( Sputnik V ) இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து தீர்மானிப்பதற்காக அடுத்த வாரம் ரஸ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.