ஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷ நேற்று தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி; ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளை மூடிமறைப்பதற்கோ, இழுத்தடிப்பதற்கோ அரசாங்கம் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.
ஊடகவியலாளர்களைத் தாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையவே கிடையாது. அப்படியானதொரு தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை.
அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது. அப்படியானதொரு நிலையில் இத்தகைய கேவலமான வேலையை செய்யவேண்டிய தேவையே இல்லை. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற போது அரசாங்கத்தின்மீது குற்றம் சுமத்துவது மிகவும் அபாண்டமானதொரு செயலாகும். லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல முக்கியஸ்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம்.
ரிவிர ஆசிரியர் காமினி விஜயக்கோனும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இது மிகவும் மோசமானது. பதவியிலுள்ள அரசாங்கம் இதற்கு வகை கூறவேண்டுமென்பது உண்மை. அதற்காக எடுத்ததற்கெல்லாம் அரசின் மீது குற்றம் சுமத்தக்கூடாது என ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். ஊடகவியலாளர்களுக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவுடன் தொடர்புகொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்கின்றன. இது நாட்டில் பாரதூரமான குரோதத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அமைதியின்மையொன்றை தோற்றுவிக்கும்.
தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பிரசாரங்களை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகளைப் பிரசுரிக்கின்றன. தயவுசெய்து தமிழர்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் எழுத வேண்டாமென மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கை தமிழ் மக்களுக்கெதிரானதல்ல. பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள தமிழ் மக்களை விடுவிப்பதற்கானது. வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செயற்பட வேண்டும். அதாவது, புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதனை வலியுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும். இத்தகைய பங்களிப்புக்களை தமிழ்ப் பத்திரிகைகள் செய்ய வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.