“எடுத்ததுக்கெல்லாம் ஐ.நாவை எதிரியாகப் பார்க்கும் நிலையிலிருந்து இந்த அரசு மாற வேண்டும். ஐ.நாவை உதாசீனம் செய்தால் பெரும் விபரீதங்கள் நிகழும்” – சஜித் பிரமேதாஸ எச்சரிக்கை !

எதிர்வரும் 2021 மார்ச் மாதமளவில் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றிணை கொண்டு வருவது தொடர்பான வாதங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றது.  இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபக்ஷ “புதிய பிரேரணையினையும் வலுவிழக்கச்செய்வோம்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் பல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஐ.நா பிரேரணை தொடர்பாக தங்களுடைய அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “எடுத்ததுக்கெல்லாம் ஐ.நாவை எதிரியாகப் பார்க்கும் நிலையிலிருந்து இந்த அரசு மாற வேண்டும். ஐ.நாவை உதாசீனம் செய்தால் பெரும் விபரீதங்கள் நிகழும்”  என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய நாடுகள் சபை மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு. உலகெங்கும் நடக்கும் மனித உரிமை மீறல்களில் தொடர்பில் அந்தச் சபைதான் முக்கிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும். எனவே, ஐ.நாவுடன் இணைந்து பயணிக்க வேண்டிய கடப்பாடு அதன் உறுப்பு நாடான இலங்கைக்கு உள்ளது. இதை அரசு உதாசீனம் செய்தால் பெரும் விபரீதங்களைச் சந்தித்தே தீரும்.

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றாவிட்டால் இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தே செல்லும். இந்த விடயத்தில் நாட்டின் நலன் கருதி அரசு மிகவும் பக்குவமாகச் செயற்பட வேண்டும்.

கடந்த நல்லாட்சி அரசில் நாம் சர்வதேசத்தை மதித்து நடந்தோம். எமது இராஜதந்திர நகர்வுகளை உலகெங்கும் விஸ்தரித்தோம். அதனால்தான் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இல்லாமல் இருந்தன.

கொரோனா ஒரு கொடிய நோய். அது உலகெங்கும் உயிராபத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தநிலையில், அதனுடன் ஜெனிவா விவகாரத்தையும் ஜனாதிபதி ஒப்பிட்டுப் பேசுவது கீழ்த்தரமான அரசியலாகும்.

இலங்கையிலிருந்து கொரோனாவை ஒழிக்கும் செயற்பாட்டு நாம் அனைவரும் முழுமையான பங்களிப்பை அரசுக்கு வழங்கி வருகின்றோம்.

இதேவேளை, வெளிநாடுகளிருந்து இலங்கைக்குக் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுத் தர ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது. ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின்போது இதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதை நாம் வரவேற்கின்றோம். எடுத்ததுக்கெல்லாம் ஐ.நாவை எதிரியாகப் பார்க்கும் நிலையிலிருந்து இந்த அரசு மாற வேண்டும்.

இலங்கை மீது புதிதாக ஐ.நா. பிரேரணை வந்தால் அதற்கு இந்த அரசே முழுப்பொறுப்பு. புதிய பிரேரணை வருவதற்கு இந்த அரசே வழிவகுத்தது என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *