“அரசு கூறுவது போல ஜெனிவாத் தீர்மானத்திலிருந்து வெளியேறவும் முடியாது. வெளியேற நாம் இடமளிக்கப்போவதும் இல்லை ” – இரா.சம்பந்தன்

எதிர்வரும் 2021 மார்ச் மாதமளவில் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றிணை கொண்டு வருவது தொடர்பான வாதங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றது.  இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபக்ஷ “புதிய பிரேரணையினையும் வலுவிழக்கச்செய்வோம்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் பல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஐ.நா பிரேரணை தொடர்பாக தங்களுடைய அதிருப்தியையும் ஐ.நா இலங்கை விடயங்களில் அதிகம் தலையீடு செய்வதாகவும் ஆதங்கம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “அரசு கூறுவது போல ஜெனிவாத் தீர்மானத்திலிருந்து வெளியேறவும் முடியாது. வெளியேற நாம் இடமளிக்கப்போவதும் இல்லை ” என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் சர்வதேச போர்ச்சட்ட விதிகளை மீறியே இறுதிப்போரை அரசும் அதன் படைகளும் நடத்தியிருந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சித்திரவதைகளுக்கு உள்ளாகி காணாமல் ஆக்கப்பட்டனர். இது அனைவரும் அறிந்த உண்மை.

2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை அரசு விலகியது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் பரிகாரம் கிடைக்கவில்லை. இறுதிப்போர் நிறைவடைந்தவுடன் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் இலங்கை அரசு உதாசீனம் செய்தது. இந்தநிலையில், இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசின் பொறுப்புக்கூறலைச் செய்ய வைப்பதற்கான கருமத்துக்காக நானும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அமெரிக்காவுக்கு முதன் முதலில் சென்றிருந்தோம்.

அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தோம். இந்தப் பின்னணியில்தான் 2012ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்து நிலைமைகளை ஆராந்து சென்று இலங்கை அரசு பொறுப்புக்கூறலைச் செய்யும் வகையிலான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றினார்கள்.

ஆகவே, பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற விடயத்தில் நாங்களே முதன்முதலாக உரிய கருமங்களை முன்னெடுத்திருந்தோம். அதன் மூலமே இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் சர்வதேச கவனத்துக்கு உட்பட்டது. அன்றிலிருந்து இற்றைவரையில் இலங்கை அரசு பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தாலும் அதன் பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டிய விடயம் தொடர்ச்சியாக நீடித்தே வந்திருந்தது. இந்தநிலையில், 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானத்துக்கு இலங்கை அரசே இணை அனுசரணை வழங்கியது. அதுமட்டுமன்றி வாக்குறுதிகளையும் வழங்கியது.

அதன் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை முழுமையாகச் செய்யாது விட்டாலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால், அவர்களால் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது போனமை துரதிஷ்டவசமாகும். அந்த அரசு பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காவும் தீர்மானம் ஐ.நா.அரங்கிலிருந்து நீங்கிவிடாமலிருப்பதற்காகவும் இரண்டு தடவைகள் தலா இரண்டு ஆண்டுகள் சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தோம். தற்போது இரண்டாவது சந்தர்ப்பம் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவுக்கு வருகின்றது.

இந்தநிலையில், நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் தொடர்ந்தும் இருக்கும் வகையிலும், அதேநேரம், இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வலுவான காரணங்களைக் குறிப்பிட்டு பரிந்துரைகளைச் செய்யவுள்ளோம். அவ்விடயம் சம்பந்தமாக பல விடயங்களை நாம் முன்னெடுத்து வந்துகொண்டிருக்கின்றோம். அவை அனைத்தையும் பட்டியலிட்டுக் கூற வேண்டியதில்லை.

ஜெனிவா தொடர்பில் தற்போதைய அரசின் அணுகுமுறை மாறுபட்டதாக உள்ளது. அரசு கூறுவதன் பிரகாரம் ஜெனிவாத் தீர்மானத்திலிருந்து வெளியேற முடியாது. அவ்வாறு வெளியேறுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதும் இல்லை.

ஜெனிவா விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புக்களுடனும் நாம் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தி வருவதோடு முன்னெடுக்கப்பட வேண்டிய கருமங்கள் தொடர்பிலும் ஆழ்ந்த கரிசனையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இதில் யாரும் சந்தேகம்கொள்ள வேண்டியதில்லை.

புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள பல அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இலங்கை அரசின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக அந்தந்த நாடுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இங்குள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

இது விடயம் சம்பந்தமாக தமது நிலைப்பாடுகளை மையப்படுத்திய எழுத்து மூலமான ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த ஆவணங்கள் மற்றும் அவர்களுடனான ஊடாட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கையாண்டு வருகின்றார்.

இந்தநிலையிலேயே அவர் தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணமொன்றை ஏனையவர்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார். அவர் ஏனையவர்களையும் ஒருங்கிணைத்து ஜெனிவாக் கருமங்களை முன்னெடுக்கலாம் என்ற எண்ணப்பாட்டில் அனுப்பினாரோ தெரியவில்லை. அவ்விதமாக அவர் முயன்றது தவறென்றும் கூறுவதற்கு இல்லை. அவர் அனுப்பிய ஆவணம் தொடர்பில் ஏனையவர்கள் தத்தமது விமர்சனக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்கள்.

எவ்வாறாயினும், புதிய ஜெனிவாப் பிரேரணை நடைமுறைச் சாத்தியமான வகையிலும், வலுவானதாகவும் அமையவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரியவாறான பரிந்துரைகளைச் செய்வோம். பலதரப்பட்ட தளங்களில் கருமங்களை முன்னெடுப்போம். சாத்தியமாகின்ற பட்சத்தில் ஏனைய தரப்புக்களையும் ஒருங்கிணைத்து எமது மக்களுக்கான நீதியைப் பெறும் பயணத்தைத் தொடரவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *