“பல சவால்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு தேசிய கொள்கைகளுக்கான உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்” என பௌத்த ஆலோசனை சபை தெரிவித்துள்ளது.
நேற்று (24.12.2020) பிற்பகல் 7 வது முறையாக ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய பௌத்த ஆலோசனை சபை கூட்டத்தின் போதே தேரர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இதன் போது அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டின் பெரும் எண்ணிக்கையான மக்களின் எதிர்பார்ப்பாகவிருந்தது ஒரு தேசிய சிந்தனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் ஒரு தலைமையாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தொழில்கள் மற்றும் சலுகைகள் போன்ற குறுகிய விடயங்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தகையவர்களின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை.
2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வீழ்ச்சியடைந்த தேசிய பாதுகாப்பு, போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளிலிருந்து விடுபட்ட ஒழுக்கமான சமூகம், வீண்விரயம் மற்றும் ஊழலை ஒழித்தல், திறமையான அரச சேவை மற்றும் நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வெளியுறவுக் கொள்கை என்பனவே மக்களின் அபிலாஷைகளாக இருந்தன என குறிப்பிட்டுள்ளனர்.
கோவிட் தொற்றுநோய் உட்பட பல தடைகளுக்கு மத்தியில், தேசிய கல்வி கொள்கை, தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் திட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட நாட்டின் போக்கை மாற்றும் ஒரு திட்டத்திற்கு அடித்தளம் அமைத்ததற்காக மகா சங்கத்தினர் ஜனாதிபதியை பாராட்டிய தேரர்கள் மகாசங்கத்தினர் விரும்பிய பௌத்த தனித்துவத்திற்கு முன்னுரிமை அளித்து, ஏனைய சமய சகவாழ்வுக்கான சமூக சூழலை அமைத்தமை இக்காலப்பகுதியில் மக்கள் அடைந்த மற்றுமொரு வெற்றியாகும். இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல அனைத்து சமயத் தலைவர்களையும் கொண்ட ஒரு குழுவின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.