“கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருடைய கவனமும் கொரோனாவுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக திரும்பியுள்ளது. இந்நிலையிலே இலங்கையும் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி,
“அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த தடுப்பூசிகள் குறித்து விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவை நியமித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய மக்கள் குழுக்கள் தொடர்பாக, அவர்களது தேவை மற்றும் வாழும் சூழலின் அபாயத் தன்மை என்பவற்றின் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் சாத்தியம் அதிகம் காணப்படும் இடங்கள் மற்றும் ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.