தேர்தல் மோசடிகள் இடம் பெறுவதை தடுப்பதற்காக தேர்தல் திணைக்களம் இம் முறை சில விசேட திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் பந்துல குலதுங்க தெரிவித்தார்.
வழமையாக வாக்களிப்பு முடிவடைந்தவுடன் வாக்குப்பெட்டிகளில் கட்சி பிரதிநிதிகளின் ஸ்ரிக்ர்கள் ஒட்டப்பட்டபின் வாக்குப் பெட்டிகள் சீல் வைத்து எடுத்துச் செல்லப்படும். ஆனால் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் வழியில் மோசடிகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பான பொதிகளில் இட்டு ‘சீல்’ வைத்து வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தத் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் வாகனங்களுடன் கட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள் உடன் செல்வதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தினத்தில் வாக்கு மோசடிகள் இடம்பெறுவதை தடுக்கவும், விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படாதெனவும் வாக்காளர்அட்டை அற்றவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.