“புதிய அரசியலமைப்பின் மூலம் அனைத்து இன மக்களின் உரிமைகளும் பலப்படுத்தப்படும்” என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டுக்கு பொருந்தும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள். புதிய அரசியலமைப்பு முரண்பாடற்ற தன்மையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கு சட்ட வல்லுனர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது. மக்களின் கருத்துக்களும் கோரப்பட்டுள்ளன.
குறுகிய கால நோக்கத்தை கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட கூடாது. அரசியலமைப்பு உறுதியானதாக இருக்கும் பட்சத்தில் அரச நிர்வாகம் பலமாக செயற்படுத்தப்படும். புதிய அரசியலமைப்பில் அனைத்து இன மக்களின் உரிமைகளும் பலப்படுத்தப்பட்டு புதிதாக பல விடயங்களும் இணைத்துக் கொள்ளப்படும்.
புதிய அரசியலமைப்பை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலும் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் நடத்த ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார்.