அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த பெண் வைத்தியர் சூசன் மோர். கறுப்பினத்தைச் சேர்ந்த இவருக்கு கடந்த நவம்பர் 29-ந்திகதி கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுவாசிக்க முடியாமல், ரத்த வாந்தி எடுத்த படி, தீவிர காய்ச்சலுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் தான் கருப்பினத்தவர் என்பதால் வைத்தியர்கள் தனக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என சூசன் மோர் குற்றம் சாட்டினார். கடந்த 4-ந்திகதி, வைத்தியசாலையில் படுக்கையில் இருந்தபடி சூசன் மோர் பேசும் காணொளி ஒன்று பேஸ்புக்கில் வெளியானது.
அதில் தமக்கு சிகிச்சை அளிக்கும்படி வைத்தியர்களிடம் கெஞ்ச வேண்டி இருப்பதாக கூறினார். மேலும் சூசன் மோர் அந்த பதிவில், தனக்கு சிகிச்சையளித்தது ஒரு வெள்ளை இன மருத்துவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த காணொளியில் சூசன் மோர் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டே கண்ணீருடன் பேசியிருந்தார்.
மேலும் தன்னை இந்த வைத்தியசாலையில் இருந்து வேறு வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படியே அவர் உள்ளூரில் உள்ள வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அதேசமயம் சூசன் மோரின் இந்த காணொளி பதிவு கருப்பின அமெரிக்க மக்கள், அமெரிக்க சுகாதாரத் துறையில் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்த ஒரு விவாதத்துக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சூசன் மோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெளி உலகிற்கு தன்னை சமாதான விரும்பியாகவும் அகிம்சைப்பிரியனாகவும் காட்டிக்கொண்டு உலக நாடுகளின் விடயங்களிலெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் அமெரிக்கா முதலில் தன்னுடைய நாட்டிலேயே நிழலாடிக்கொண்டிருக்கும் இனவெறிப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு அடுத்தவர் பிர்சினைக்கு செல்லலாம். நிறவெறிப்பிரச்சினையால் இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் பறிபோன மூன்றாவது உயிர் இதுவாகும்.