கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறமிருக்க உருமாறிய கொரோனா வைரசில் இருந்து மக்களைக் காக்க பிரித்தானிய அரசு தற்போது போராடி வருகிறது. அங்கு கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் மற்றும் இறப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
எனவே, பிரிட்டனின் பெரும் பகுதி கடும் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், லண்டனில் நத்தார் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் கொண்டாட்டங்கள் சில தளர்வுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரித்தானிய ராணி எலிசபெத் பதிவுசெய்யப்பட்ட தனது கிறிஸ்துமஸ் தின உரையில் நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பலர் விரும்புவது ஓர் எளிய அரவணைப்பு. தனது அன்புக்குரியோரை கொரோனா வைரஸ் தொற்றால் இழந்தவர்களுக்கு அல்லது அரசால் விதிக்கப்பட்ட தடைகளால் உறவுகளைப் பிரிந்து கிடப்பவர்களுக்கு இந்த சூழ்நிலை மிகவும் கடினமாக இருக்கும். மில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் இந்த ஆண்டு தங்கள் வழக்கமான குடும்ப கொண்டாட்டங்களை நடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
இந்த பண்டிகை நாளில் தங்களது அன்பானவர்களின் இழப்புக்கு சிலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் மக்களில் பலரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை காணவில்லை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.