“தமிழர்களும் முஸ்லீம்களும் சமய வேறுபாடுகளை கடந்து தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் இந்த அரசை எதிர்க்க முடியும் ” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
முஸ்லீம் மக்களின் ஜனாசா விடயத்தில் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது. இது நியாயமான கோரிக்கையே. உலக நாடுகளில் எந்த நாடும் இப்படி ஒரு அநியாயத்தை செய்யவில்லை. இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் அடிப்படை விடயங்களில் இந்த அரசு கைவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். எனவே முஸ்லீம்களின் உடல்கள் சமய ரீதியாக புதைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இருக்க கூடாது. தமிழ் பேசும் மக்கள் மீது இந்த அரசு கொடூரமான கரங்களை நீட்டிக்கொண்டு வருகிறது. அதேபோல எமது நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இருப்பிடத்தையும் இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டை மிக திறமையாக செய்து வருகின்றது.
இந்தவிடயத்தில் எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும். நாங்கள் சமய வேறுபாடுகள் இன்றி தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்க முடியும். அடிபணிய வைக்கமுடியும். இந்த விடயத்தில் முஸ்லீம் மக்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.