இரு தசாப்த அகதி வாழ்க்கைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முற்றுப் புள்ளி வைக்கும் காலம் அண்மித்துவிட்டதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மன்னாரில் தெரிவித்தார். மன்னார் முருங்கன் பரியாரிகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஒரு கோடி 30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக்கான இரு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் சந்தியாகோ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது; சமூகத்திற்கான விடுதலைக்கு போராடுவதாகக் கூறிக்கொண்டு தனது இனத்தைச் சார்ந்தவர்களை அழித்துவந்த வரலாற்றை நாம் ஒரு போதும் மறந்துவிட முடியாது. இந்த காரணத்தால் இன்று சுமார் ஒரு இலட்சம் மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு இந்தியாவில் அகதி முகாமில் அவலம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க நேரிட்டுள்ளது. அதேபோல் எத்தனை உயிர்களை எமது சகோதரர்கள் இழந்துள்ளனர்.
உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய நாங்கள் இன்று சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு கூட பெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு மக்கள் எனக்களித்த வாக்குப் பலத்தால் இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கும் வடக்கில் வாழும் எமது மக்களுக்குமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கிலஸ் பிள்ளை, கல்விப் பணிப்பாளர் ஆர்பல் ரெவல், அமைச்சின் இணைப்பு செயலாளர் அலிகான் ஸரிப் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.