சமூகத் தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அச்சமூகத்தை வழிநடத்தும் தலைமைத்துவத்தின் ஆளுமையிலேயே தங்கியுள்ளது என்று தெரிவித்துள்ள மத்திய மாகாணசபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் மாட்டு வண்டிச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவின் தலைமை வேட்பாளரான எஸ். ஸ்ரீநிவாசன் இத்தேர்தலை தமிழர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் மந்தண்டாவளை பிரதேச தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஒரு சமூகம் ஆளுமை மிக்க தலைமைத்துவமொன்றை உருவாக்கிக்கொள்வதன் மூலமே தமது சமூகத்திலிருந்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் பேரும் புகழும் பெற்றுக்கொடுக்ககூடியதான புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.
எனவே இந்த மாகாணசபைத்தேர்தலில் மலையக தமிழ் மக்கள் தம்மை முறையாக வழிநடத்தக்கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்துக்கொள்வது அவசியமாகும் ஒரு சமூகத்தை வழிநடத்தக்கூடிய அரசியல் தலைமைத்துவங்கள் பச்சோந்திகளைப் போல் அவ்வப்போது நிறமாறிக்கொண்டிராது, நிலையானதும் உறுதியானதுமான கொள்கைகளை கொண்டிருக்க வேண்டும். தனது ஆளுமையை தனது மக்களது மேம்பாட்டுக்கு தியாகம் செய்யக்கூடிய மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும்.
மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில் மாத்தளை மாவட்டத்திலேயே பெருமளவிலாக கல்விமான்களும் புத்திஜீவிகளும் உள்ளனர். பெரும்பாலும் சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஆளுமையும் உறுதியான அரசியல் கொள்கையுமுள்ள தலைமைத்துவமொன்றை உருவாக்கிக்கொள்ளமுடியாமல் போய்விட்டதால் பாராளுமன்ற பிரதிநிதித்துவமொன்றை பெற்றுக்கொள்ளக் கூடிய வாக்குப்பலமிருந்தும் மாகாணசபை உறுப்பினர் ஒருவரைக் கூட தெரிவுசெய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அன்றுமுதல் இன்றுவரை மாத்தளை வாழ் தமிழ் சமூகம் குறிப்பிட்ட ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக பெரும்பான்மை சமூக கட்சிகளுக்கே இரையாகிப் போயுள்ளனர். இந்த மாகாணசபைத் தேர்தலில் கூட மாத்தளை மாவட்டத்தில் பெரும்பான்மைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தமிழர்கள் வெற்றிபெறவேண்டும். குறைந்தபட்சம் 18 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெறவேண்டும். இதேசமயம், சுயேச்சைக்குழுவில் போட்டியிடும் நாம் வெற்றிபெறவேண்டுமெனில் சுமார் 6 ஆயிரம் விருப்புவாக்குகளை பெற்றுவிட்டால் போதுமானது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாலும் 18 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கடினமான விடயமாகும் என்றார்.