பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ் மற்றும் அரைச் சொகுசு பஸ்கள் கொண்டிருக்க வேண்டிய பயண வசதிகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பயணிகளை கவர்வதற்கான சிறந்த பயண சேவையை வழங்கும் நோக்கில், இந்த அறிவித்தலை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கிணங்க, ஆசன ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரைச் சொகுசு பஸ்களில் பின்வரும் 8 பயணிகள் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும். பயணிகள் ஆசனம் 700 மில்லிமீற்றர் உயரமும் 40 பாகை சரிவையும் கொண்டிருப்பதுடன் பக்க வாட்டில் கை இருக்க வசதிகள் இருக்கவேண்டும்.
ஆசனத்துக்கு மேலே இருக்க வேண்டிய இடைவெளி 680 மில்லிமீற்றர் ஆகவும் இரு ஆசனங்களுக்கு இடையிலான தூரம் 300 மில்லிமீற்றராகவும் இருப்பதுடன் ஆசனங்கள் இலக்க மிடப்பட்டிருப்பதுடன் பயணச் சீட்டுகள் ஆசனங்கள் தொடர் இலக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
ஆசனங்களின் எண்ணிக்கை 40க்கு அதிகமில்லாமலும் பொதிகள் வைப்பதற்கான இடம் ஒரு சதுர மீற்றர் இடைவெளி கொண்டதாகவும் இருப்பதுடன் சாரதிக்கான பக்க கண்ணாடிகள் தவிர ஜன்னல் கண்ணாடி இலேசான நிறம் கொண்டவையாக இருக்க வேண்டும்.
அத்துடன், சொகு பஸ் வண்டிகளுக்கு இந்த வசதிகளுடன் மேலதிகமாக ஆசனங்கள் 25 ஆக இருப்பதுடன் குளிரூட்டப்பட்ட பஸ் சேவையாக இருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.