போர்க் குற்றங்களிலிருந்து இஸ்ரேலிய படைவீரர்களை அரசாங்கம் பாதுகாக்கும் -இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு

gaa-sa.jpgகாஸா மீதான படை நடவடிக்கை தொடர்பில் எந்தவொரு இஸ்ரேலிய படைவீரர் மீதும் போர்க்குற்றம் சுமத்தப்பட்டால் இது தொடர்பான விசாரணைகளிலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்குமென அந்நாட்டுப் பிரதமர் எஃகுட் ஒல்மேர்ட் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டைப் பாதுகாத்த அவர்களின் நடவடிக்கைக்காக இஸ்ரேல் அவர்களைப் பாதுகாக்கும் என்பதை இராணுவத்தினர் அறிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

22 நாட்களாக நடைபெற்ற காஸா மீதான தாக்குதல்களில் 1300 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ள நிலையில் இங்கு போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கு சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென ஐ.நா. அதிகாரிகள் விரும்புகின்றனர். வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஒல்மேர்ட் நாட்டின் தேவைக்காக சாவின் விளிம்புக்கு தமது வாழ்வை அர்ப்பணித்த இராணுவ வீரர்கள் கடல்கடந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. காஸாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட படைவீரரும் தளபதிகளும் எம்மைப் பாதுகாத்துள்ளனர். இதற்காக எவ்வித விசாரணைகளிலிருந்தும் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கும் என்பதனையும் இவ்விடயம் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களுக்கு உதவும் என்பதையும் இராணுவ வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களினால் இஸ்ரேலிய இராணுவ தந்திரோபாயங்கள் கடும் கண்டனங்களுக்குள்ளாகியுள்ளன. கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பொஸ்பரஸ் குண்டுகளை வீசியமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைக் குழுக்கள் முறையிட்டுள்ளன.
வெண்ணிற பொஸ்பரஸை பயன்படுத்தியமையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டபோதும் சர்வதேச சட்டங்களை தான் மீறவில்லையெனத் தெரிவிக்கின்றது.

போராட்ட களங்களில் புகையை உருவாக்குவதற்காக வெண்ணிற பொஸ்பரஸ் பயன்படுத்துவது சட்டரீதியாக்கப்பட்டுள்ள அதேவேளை, இஸ்ரேல் இதனை மக்கள் குடியிருப்புக்கள் மீது பயன்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்களும் செய்தியாளர்களும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எகிப்திய மத்தியஸ்தர்களுக்கு 18 மாதகால போர்நிறுத்தமொன்றை இஸ்ரேல் முன்வைத்துள்ள அதேவேளை, ஹமாஸ் ஒரு வருட போர்நிறுத்தத்தை பிரேரித்துள்ளது.நீண்டகால போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்தும் பேச்சுக்களுக்காக ஹமாஸ் தூதுக்குழு எகிப்தை சென்றடைந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *