பாகிஸ்தானில் தொடரும் இந்துக்களுக்கெதிரான மதவாத கிளர்ச்சிகள் – மக்கள் வழிபட்ட கோயில் தீக்கிரையாக்கப்பட்டு முழுமையாக உடைப்பு !

பாகிஸ்தானில் சிறுபான்மையாக வாழ்ந்துவரும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, இந்து மதத்தை சேர்ந்தவர்களையும் அவர்கள் வழிபாடு நடத்தும் கோவில்களையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்களை அந்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் ஆதரிப்பதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கரக் மாவட்டம் தெறி என்ற கிராமத்தில் இந்து மத கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வாரம் தோறும் அப்பகுதியில் வசித்துவரும் இந்துக்கள் வழிபாடு செய்வது வழக்கம்.
இந்நிலையில், இந்து மத கோவில் அமைந்திருந்த தெறி கிராமம் அருகே ஜமாத் உலேமா இ இஸ்லாம் எஃப் என்ற இஸ்லாமிய மதவாத கட்சி நேற்று பேரணி ஒன்றை நடத்தியது.
இந்த பேரணியின் போது கூடியிருந்தவர்களிடம் இந்துமத கோவிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சை சிலர் ஒலிப்பெருக்கி மூலம் பேசினர். இந்த வெறுப்புணர்வு பேச்சால் உணர்ச்சிவசமடைந்த பேரணியில் கூடியிருந்தவர்கள் தெறி கிராமத்தில் உள்ள இந்து மத கோவிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கும்பலாக கோவில் இருந்த பகுதிக்கு சென்றனர்.

கிராமத்தில் இந்து மத கோவில் அமைந்திருந்த பகுதிக்கு சென்ற அந்த கும்பல் கோவிலை முற்றுகையிட்டனர். மேலும், அந்த இந்து மத கோவில் கட்டிடத்தை இடித்தனர். கோவிலை தீ வைத்து கொளுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் இந்து மத கோவில் தீக்கிரையாகி, கட்டிடம் தகர்க்கப்பட்டு முழுவதும் அழிக்கப்பட்டது. கோவில் முழுவது அழிக்கப்பட்ட பின்னர் சில மணி நேரம் கழித்தே அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்து மத கோவில் அழிக்கப்படுவதற்கு காரணமாக இருந்து ஜமாத் உலேமா இ இஸ்லாம் எஃப் அரசியல் கட்சியின் பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மௌளானா அதர் ரகுமான் தனது கட்சி பேரணிக்கும் இந்து மத கோவில் தீ வைத்தும், இடித்தும் எரிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *