மரண நிர்வாகத்துறை செயற்பாடுகளில், நீதியமைச்சர் அலி சப்ரி நேரடியாகத் தலையிடுவதாகவும் அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நீதிமன்ற வைத்திய நிறுவன வைத்தியர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில், எதிர்ப்பு யோசனையையும் நிறைவேற்றி உள்ளதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் தலைவர், நீதிமன்ற வைத்தியர் அசேல மென்டிஸின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை நீதிமன்ற வைத்தியர்களால் முன்னெடுக்கப்படும் சுயாதீன மரண நிர்வாகச் செயற்பாடுகளில் தேவையற்ற தலையீடு மற்றும், சுகாதார அமைச்சால் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை அகற்றுவது குறித்து நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் தலைவருக்கு அழுத்தம் விடுக்கும் அமைச்சரின் செயற்பாட்டை, நீதிமன்ற வைத்திய நிறுவனத்தின் வைத்தியர்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதியமைச்சர் அலி சப்ரியை அப்பதவியில் இருந்து உடனடியாகப் பதவி நீக்கி, கைதுசெய்ய வேண்டுமென உலபனே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். ‘ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடமளிக்காது விட்டால், முஸ்லிம் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களை எடுப்பர்’ என நீதியமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், இவரது இந்த அறிவிப்பானது பாரதூரமானது என்பதால், அமைச்சர் அலி சப்ரியை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்’ எனவும் சுமங்கள தேரர் கோரியுள்ளார்.